
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து

எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....
